– மகாகவி சுப்ரமணிய பாரதி

bharathi book size

”  என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் இந்த அடிமையின் மோகம் …? “

இந்த நாடு சுதந்திரம் பெற
உயிர்த்தியாகம் செய்தவர்கள் எத்தனை லட்சம் பேர்…. !

அந்தமான் செல்லுலார் சிறைக்கு அனுப்பப்பட்டு,
திரும்பவும் தாய் மண்ணைப் பார்க்காமல்
அங்கேயே உயிரை விட்ட உத்தமர்கள் எத்தனை பேர் …!

அன்னை, தந்தை, மனைவி, மக்கள், குடும்பம் என்று யோசிக்காமல் –  தாய்நாட்டின் விடுதலையொன்றே குறி என்று லட்சிய வெறி கொண்டு சிறைப்பட்டவர்,
வெஞ்சிறைகளிலேயே உயிரை விட்டவர்கள் எத்தனை பேர்….!

சுப்ரமணிய பாரதியும், வ.உ.சி.யும்,
வாஞ்சிநாதனும், பகத் சிங்கும் இந்த நாடு சுதந்திரம் பெற  எதிர்கொள்ளாத இன்னல்களா ?

கையிலேந்திய கொடியை விட மறுத்து
தன் இன்னுயிரையும் விடத்துணிந்த திருப்பூர் குமரனும்,
பெயர் தெரியாத எத்தனையோ சுதந்திரப் போராட்ட வீரர்களும் செய்த தியாகங்களின் விளைவு தானே இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரமும் ….. ஜனநாயகமும்….

” என்று தணியும் இந்த சுதந்திர தாகம் –
என்று மடியும் இந்த அடிமையின் மோகம் “
என்று ஏங்கிய பாரதி பார்க்கக் கிடைக்காத – சுதந்திரமும், ஜனநாயகமும் நமக்கு கிடைத்து விட்டது தான் … ஆனால் –

– சுதந்திரம் கிடைத்ததே தவிர –
அதன் உண்மையான பலனை நாம் அனுபவிக்கிறோமா ..?
சுதந்திரத்திற்கான உண்மையான அர்த்தம் என்ன என்றாவது நமது மக்களுக்கு விளங்குகிறதா ..?
உண்மையான ஜனநாயகம் என்றால் என்ன
என்பது நம் மக்களுக்குப் புரிகிறதா ..?

அதன் காரணமென்ன ?
சுதந்திரம் பெற்றும் அடிமைகளாக நாம் இருப்பது தானே ?
வெள்ளைக்காரர்களை விரட்டி விட்டு,
அரசியல்வாதிகள் என்கிற கொள்ளைக்காரர்களுக்கு
நாம் அடிமைகளாக மாறி விட்டது தானே உண்மை ?

மக்களுக்காக,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட,
மக்களைக் கொண்ட – அரசு
(for the people, by the people, and of the people)
என்பது தானே ஜனநாயகத்திற்கான வரையரை..?

அதாவது தங்களுக்கு நல்ல முறையில் சேவை
செய்யக்கூடியவர்கள் என்று நம்பி –
மக்கள் தேர்ந்தெடுத்த-
அவர்களுக்குள்ளேயே சில நபர்களைக்
கொண்ட அரசாட்சிதான் – மக்களாட்சி.

ஆனால் நம் நாட்டில் நடைபெறுவது என்ன ?
நல்லவர்களால், யோக்கியர்களால்,
பணவசதி இல்லாதவர்களால் –
தேர்தலில் நிற்க முடிகிறதா ?
வெற்றி பெற முடிகிறதா ?

அல்லது மக்களுக்குத்தான் தேர்தலின் மூலம்
நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கும்
வாய்ப்பு நிஜமாகவே கிடைக்கிறதா ?

அரசியல் கட்சிகள் “பொறுக்கி” எடுத்து அறிவிக்கும்
வேட்பாளர்களுக்குள் யாராவது ஒருவரைத் தானே
மக்கள் இன்று தேர்ந்தெடுத்தாக வேண்டி இருக்கிறது.

அரசியல் கட்சிகள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது
எப்படி ? எந்த அடிப்படையில் ?

– அந்தந்த தொகுதியில் நிலவும்
பெரும்பான்மை ஜாதிகளின் அடிப்படையிலும்,
-இன, மத, மொழி அடிப்படையிலும்,
-கட்சி மட்டத்தில் அதிகாரமும், செல்வாக்கும்,
பணபலமும் யாருக்கு அதிகம் இருக்கிறதோ –
அவர்களைத் தானே கட்சிகள் வேட்பாளர்களாக
அறிவிக்கின்றன.

தனது கட்சிக்குள்ளேயே வேட்பாளராக
அறிவிக்கப்படுவதற்கு ஒரு மனிதர் எவ்வளவு
தகிடுதத்தங்கள் செய்ய வேண்டியிருக்கிறது ?
எவ்வளவு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது ?

இந்த சூழ்நிலையில் மக்கள் எப்படி
நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது ?
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் ..?

இருப்பதற்குள் குறைந்த பட்ச மோசடியாளர் யார்
என்று தீர்மானித்து தேர்ந்தெடுக்கிற வாய்ப்பு மட்டுமே
மக்களுக்கு கிடைக்கிறதே தவிர நல்ல மனிதர்கள்
சட்டமன்றத்திற்கோ, பாராளுமன்றத்திற்கோ
தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப் படுவதற்கான வாய்ப்பு
இப்போதைய சூழ்நிலையில் எங்கே இருக்கிறது ?
(மிகச்சில விதிவிலக்குகளைத் தவிர )

“என்று மடியும் இந்த அடிமையின் மோகம்” என்று கேட்டுவிட்டு –
இன்று நம் மக்களில் பெரும்பாலானோர் – விரும்பியே,
அரசியல்வாதிகளின் அடிமைகளாகத் தானே இருக்கின்றனர் ?

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக
பெருமை பேசப்படும் நம் நாட்டில் அதிகாரத்தில் ஒட்டிக்
கொண்டிருக்கும் தலைவர்களில் எத்தனை பேர்
நாட்டின் மீதும், நம் மக்களின் மீதும் அக்கரை கொண்டிருக்கின்றனர் ?

உண்மையிலேயே எத்தனை
தலைவர்கள் இந்த நாடு முன்னேற அக்கரையோடு
உழைக்கின்றனர் ? எத்தனை தலைவர்களுக்கு
இந்த மண்ணின் மீது பக்தியும் பாசமும் இருக்கிறது ?

எந்தெந்த வழிகளில் எல்லாம் சம்பாதிக்கலாம் –
எப்படி எல்லாம் சுருட்டலாம் என்று தானே இன்றைய
பெரும்பாலான அரசியல்வாதிகள் சதா சர்வகாலமும்
யோசித்துக் கொண்டிருக்கின்றனர் ?

நல்லவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பத்தான் நமது தேர்தல் முறைகளில் வழி, வாய்ப்பு இல்லை – சரி.

அதற்காக – நம்மால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர்கள்
செய்யும் தவறுகளையும், அயோக்கியத்தனங்களையும்
கூட நாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டிய
அவசியமில்லையே ?
தவறு செய்யும்போதெல்லாம் தட்டிக்கேட்க வேண்டாமா ?
நம் எதிர்ப்பைக் காட்ட வேண்டாமா ?
மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் –
இவற்றை எல்லாம் அனுமதிக்க மாட்டார்கள் என்கிற
குறைந்த பட்ச பயமாவது அவர்களுக்கு இருக்க வேண்டாமா ?

அதைச்செய்யக்கூட நமக்கு வக்கில்லை என்றால்
நாம் ஜனநாயகத்திற்கு அருகதை அற்றவர்கள் என்று தானே பொருள் – இல்லையா ?

எனவே, நாம் செய்ய வேண்டியது –
மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப –
நம்மால் இயன்றதைச் செய்வது தான் தான்..!
சரியான கருத்துக்களை மக்களிடையே பரவச்செய்வது தான்…!

இதைத்தான் நாம் ( நானும் நீங்களும் சேர்ந்து தான் )
விமரிசனம் வலைத்தளத்தின் மூலம்
செய்ய முயன்று கொண்டிருக்கிறோம்.

அரசியல்வாதிகளை எப்போது மாற்ற முடியும் ?
அதற்கு முதலில் – மக்கள் மாற வேண்டும்…!

மக்கள் அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டும்.
காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவது
எவ்வளவு பெரிய அருவருப்பான விஷயம்
என்பதை அவர்கள் உணர வேண்டும்.

 

படித்தவர்கள், வசதி படைத்தவர்கள் –
சமுதாயத்தின்பால் அக்கரை கொள்ள வேண்டும் –
குறைந்த பட்சம் ஓட்டுச்சாவடி வரை சென்று
தவறாமல் ஓட்டாவது போட வேண்டும் !

 

உழைக்காமல் சம்பாதிக்கும் பணம்,
எச்சில் இலையில் சாப்பிடுவதற்கு சமம்
என்பதை மக்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

தவறு செய்பவர்களைக் கண்டு காரி உமிழும் துணிவு வேண்டும். பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி மீடியாக்களும், அரசாங்கத்திற்கு பயப்படாமல், துணிந்து தங்கள் கடமையைச் செய்ய முன் வர வேண்டும்.

நாம் என்ன செய்ய முடியும் …?

முதலில் கட்சி அரசியலை விட்டு வெளியே வர வேண்டும். மக்கள் அரசியல்வாதிகளின் அடிமைகளாக இருக்கும் நிலை ஒழிய வேண்டும். கட்சி அரசியல் சாதாரண பொது மக்களுக்கு தேவை இல்லாதது…

எந்த தலைமை வேண்டும் ..
எந்த கட்சி ஆட்சியில் அமர வேண்டும் என்பதை
தேர்தல்கள் வரும் நேரத்தில் நாம் தீர்மானித்தால் போதும்.

மற்ற நேரங்களில், யாராக இருந்தாலும் சரி –
எந்த தலைவரானாலும், எந்த கட்சியானாலும் சரி –
நல்லது செய்தால் பாராட்டுவோம் –
தவறு செய்தால் கண்டிப்போம் –
எதிர்ப்புக் குரல் கொடுப்போம்.,

நமக்காக உழைத்த சுதந்திர போராட்ட தியாகிகளின் உழைப்பு வீண் போகவில்லை என்கிற நிலையை உருவாக்குவோம்.

நம் கடமையை நாம் செய்வோம் –
நடக்க வேண்டியவை தானாகவே நடக்கும்.

இன்றில்லா விட்டாலும் நாளையாவது
இந்த நிலை மாறும்… !!!
ஒளிமயமான எதிர்காலம் உருவாகும் என்று நம்புவோம். !

 

 

-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
14/04/2015

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book